அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 23 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட 23 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த நாடுகள் போதைப்பொருள் கடத்தலை முழுமையாக தடுக்கத் தவறிவிட்டன என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இந்த பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூற முடியாது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். சீனா, ஃபென்டானில் போன்ற செயற்கை போதைப்பொருள்களை உருவாக்குவதில் முன்னிலை வகிப்பதாகவும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலால் அமெரிக்காவில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இது 18 முதல் 44 வயது வரையிலான அமெரிக்கர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.