வங்காள தேசத்திலுள்ள சிட்டகாங் பகுதியில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்படுவது இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான யொகோடாவிலிருந்து ஒரு C-130J சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், வங்கதேசத்தின் சிட்டகாங் நகரிலுள்ள ஷா அமானத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் மியான்மருக்கும் மிக அருகில் இருக்கும் சிட்டகாங் பகுதிக்கு அமெரிக்க விமானம் வந்திருப்பது, வங்காள விரிகுடா பிராந்தியத்தில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகரித்து வருவதை காட்டுவதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் அண்மையில் இளைஞர்களின் போராட்டங்களுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஆட்சிப் பொறுப்பேற்றார். அதிலிருந்து, கூட்டு ராணுவப் பயிற்சிகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்க ராணுவம் அடிக்கடி சிட்டகாங் பகுதிக்கு வருகை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.