காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் அபாயங்கள் உருவாகியுள்ள நிலையில், இரு நாடுகளும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக, இந்தியா தரப்பிலிருந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாகிஸ்தான் தரப்பிலிருந்து வான் வழியை இந்தியா பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவும் தனது வான் வழியை அடைத்துள்ளது.
இதனால், பாகிஸ்தான் விமானங்கள் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது வான் வழியை அடைத்ததால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மாறாக, இந்தியா வான்வழியை அடைத்ததன் காரணமாக, பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானம், இதுவரை இந்தியா வழியாக மிக எளிதாக சென்றுவந்த நிலையில், தற்போது சீனா மற்றும் தாய்லாந்து வழியாக செல்லும் கட்டாய நிலை உருவாகியுள்ளது.
புதிய பாதைகள் மூலம் பயண நேரம் அதிகரிக்கிறது, மேலும் டிக்கெட் விலை உயருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.