ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் உறவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் நேரடியாக தொடர்புடையது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி செய்தியாளர்களிடம் விளாசினார்.
“போர் எப்போது தொடங்க வேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யட்டும்; ஆனால் அது எங்கு முடிவடையும் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்” என்று அவர் கூறினார். மேலும், “இந்தியா தாக்குதல் நடத்தினால், பின்வாங்காமல் வலுவான பதிலடியை எதிர்பார்க்கலாம். நிலம், வானம், கடல் என எங்கு வேண்டுமானாலும் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ஆயத்தமாக இருக்கிறது,” என்றார்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தொடர்புடையது என இந்தியா உடனே எப்படி முடிவு செய்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இந்தியா தேர்தல் காலத்தில் முஸ்லிம்களை குறி வைக்கும் சூழ்நிலையை உருவாக்க பயங்கரவாத சம்பவங்களை பயன்படுத்துகிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.