ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், காவல்துறையில் 26 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், தற்போது மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் அவரையும் அவரது எட்டு சகோதரர்களையும் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் 26 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய ஒருவர் பாகிஸ்தானியர் என தற்போது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரையும் அவரது எட்டு சகோதரர்களையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால், தற்காலிகமாக நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபரின் குடும்பம் அட்டாரி எல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும், தற்போது அவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜம்முவுக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் ஜம்முவில் சொந்தமாக நிலம் வைத்திருப்பதாகவும், “நாங்கள் இந்தியாவில்தான் இருப்போம்; பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம்” எனக் கூறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, உயர்நீதிமன்றத்தால் தற்காலிகமாக நாடு கடத்துவது நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.