வந்தே பாரத் மற்றும் தேஜஸ் போன்ற அதிவிரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 'உணவு வேண்டாம்' என்ற விருப்பத்தேர்வு நீக்கப்பட்டதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். முன்பு தனித்தனியாக இருந்த இந்த விருப்பம் இப்போது நீக்கப்பட்டு, கட்டாயமாக ஒரு உணவு வகையை தேர்வு செய்தால்தான் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடிகிறது.
இதனால், தரமற்ற ரயில்வே உணவிற்காக பயணிகள் ஒருவருக்கு ரூ. 120 முதல் ரூ. 280 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மாற்றம் குறித்து இந்திய ரயில்வே எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
உண்மையில், 'உணவு வேண்டாம்' என்ற விருப்பம், முன்பதிவு பக்கத்தின் கீழே 'I dont want Food/Beverages' என்ற தலைப்பில் ஒரு செக்பாக்ஸாக மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பயணிகள் இதை பார்க்கத் தவறி, உணவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக கருதி அதிருப்தி தெரிவிக்கின்றனர். பயணிகளுக்கு குழப்பம் ஏற்படாத வகையில், 'உணவு வேண்டாம்' விருப்பத்தை தெளிவாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.