ஆகஸ்டு 31ம் தேதியன்றி பிரதமர் மோடி சீனாவுக்கு செல்ல உள்ள நிலையில், சீன அதிபர் ஜிங்பிங், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ரகசியக் கடிதம் ஒன்றை எழுதியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் உலக நாடுகளை ஆட்டுவிக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் அதிபர் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு அதிகமான வரிகளை விதித்துள்ளார். ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி இந்திய பொருட்களுக்கான வரியை உயர்த்திய ட்ரம்ப், காந்த தனிமங்கள் தராவிட்டால் வரியை உயர்த்துவேன் என சீனாவையும் மிரட்டி வருகிறார்.
ட்ரம்ப் என்ற பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்துள்ள நிலையில், இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பின்போது சீனா தனது தார்மீக ஆதரவை இந்தியாவிற்கு வழங்கியது. தற்போது ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுடன் நட்புக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே சீன அதிபர் ஜிங்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு இரு நாடுகளிடையேயான பரஸ்பர உறவுகள் குறித்து ரகசியமாக கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் இந்தியா - சீனா இடையேயான முடிச்சுகளை சரிசெய்வதற்கு சரியான நேரம் இதுதான் என அவர் கூறியிருந்ததாக கூறப்படுகிறது.
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாக உள்ள சீனாவும், இந்தியாவும் உலக அளவில் அதிக ஜிடிபி மதிப்பு கொண்ட நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள்ளும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக முன்னிலையிலும் உள்ளன. எனவே இந்த இரு நாடுகளும் சேர்ந்து எடுக்கும் எந்த முடிவும் உலகளாவிய பொருளாதாரத்திலும், அமெரிக்க ஏதேச்சதிகாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என உலக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் வரும் ஆகஸ்டு 31ம் தேதி ஜப்பான் பயணம் முடித்து சீனாவிற்கு செல்கிறார் பிரதமர் மோடி. 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவிற்கு பிரதமர் மோடி செல்லும் நிலையில், இந்த சந்திப்பில் மோடி - ஜின்பிங் இடையே அமெரிக்காவின் வரி நெருக்கடிகள் குறித்தும், இரு நாடுகளின் ஒற்றுமையை, பொருளாதார ஆதரவை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K