வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.
இந்த சர்வதேச கிரிக்கெட் திருவிழாவை இந்தியாவுடன் இணைந்து இலங்கையும் நடத்துகிறது. இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். ஆனால் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றால், இரு நாடுகளின் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தின் காரணமாக அந்த ஆட்டம் இலங்கைக்கு மாற்றப்பட்டு நடைபெறும்.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், முதல் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 7 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தச் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெறுகின்றன. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறும். பின்னர் மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி கோப்பைக்கான இறுதிப் போட்டியும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடருக்கான 20 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா.
குரூப் பி: ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன்.
குரூப் சி: இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், நேபாளம், இத்தாலி.
குரூப் டி: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா.
இத்தொடருக்கான போட்டிகள் இந்தியாவில் உள்ள டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 5 முக்கிய நகரங்களிலும், இலங்கையில் கொழும்பில் உள்ள இரண்டு மைதானங்கள் மற்றும் கண்டி உட்பட 3 இடங்களில் நடத்தப்படவுள்ளன. குரூப் சுற்றில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களின் விவரம்:
பிப்ரவரி 7: இந்தியா vs அமெரிக்கா (மும்பை)
பிப்ரவரி 12: இந்தியா vs நமீபியா (டெல்லி)
பிப்ரவரி 15: இந்தியா vs பாகிஸ்தான் (கொழும்பு)
பிப்ரவரி 18: இந்தியா vs நெதர்லாந்து (அகமதாபாத்)