கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் மும்பை உள்பட ஒரு சில அமேசான் கிளைகளில் ஏராளமானோர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கனடாவில் உள்ள 7 அலுவலகங்களை அமேசான் நிறுவனம் மூட இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றின் போது ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து நிறுவனங்கள் ஓரளவு மீண்டு வந்தாலும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக வேலை நீக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசானுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. அந்த வகையில் கனடாவில் உள்ள சில கிளைகள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அங்குள்ள 7 அலுவலகங்களை மூட அமேசான் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதன் மூலம் இந்த அலுவலகங்களில் வேலை செய்யும் 1700 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கையும் சேர்ந்து கொள்வதால் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.