இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி நியாயமற்றது என இந்தியா மட்டுமல்லாமல் சீனாவும் கூட கூறி வரும் நிலையில், அந்த முடிவு சரி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரியும், பின்னர் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வணிகம் செய்து போருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மேலும் 25 சதவீத வரியும் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வணிகத்தை இந்தியா நிறுத்திக் கொள்ளவில்லை.
ரஷ்யாவுடனான வணிகத்தை நிறுத்தாவிட்டால் இந்தியா மீதான வரியை மேலும் அதிகரிப்பேன் என ட்ரம்ப் மிரட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியா மீதான வரிகள் குறித்து அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதுகுறித்து பேசிய அவர் “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்த நினைக்கும் நாடுகள் அவர்களோடு வர்த்தகம் செய்யக் கூடாது” என பேசியுள்ளார்.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து அமெரிக்கா செயல்படுவதால் அவர் அப்படி பேசியுள்ளார். ஆனால் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி சுத்திகரித்து தயாரிக்கும் டீசலை உலக அளவில் உக்ரைனே அதிக அளவில் வாங்கி வருகிறது. உக்ரைனின் பிரதான டீசல் விநியோகிக்கும் நாடான இந்தியா குறித்து ஜெலன்ஸ்கி இவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K