அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தியா வரிகளால் அமெரிக்காவை கொல்வதாக ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்திய ட்ரம்ப், இந்தியாவிற்கு முதலில் 25 சதவீதம் வரிவிதித்து, பின்னர் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் வரியை ஏற்றி 50 சதவீதம் வரி விதித்தார். பிரேசிலுக்கும் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல துறைசார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய பொருட்கள் விலை உயர்வால் அமெரிக்க மக்களும் வாங்க முடியாத சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் ட்ரம்ப் அறிவித்த வரிவிதிப்பை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதை தொடர்ந்து ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் ஆதங்கத்துடன் பேசிய ட்ரம்ப் “சீனா வரிகளால் எங்களை கொல்கிறது. இந்தியாவும் வரிகளால் எங்களை கொல்கிறது. பிரேசிலும் எங்களை வரிகளால் கொல்கிறது. அவர்களை விட எனக்கு வரிகளை பற்றி நன்றாக தெரியும். இந்த உலகில் வரி விதிப்பை பற்றி என்னைவிட நன்றாக தெரிந்தவர்கள் யாரும் இல்லை. இந்தியாதான் உலகிலேயே அதிகமான வரிவிதிக்கும் நாடு.
ஆனால் இப்போது அமெரிக்கா அறிவித்த வரிகளுக்கு பிறகு அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை மொத்தமாக குறைக்க அவர்கள் முன்வந்தனர். நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால் இந்தியா ஒருபோதும் இந்த முடிவுக்கு வந்திருக்காது. வரி விதிப்பதால்தான் பேரம் பேசுவதற்கு நமக்கு சக்தி கிடைக்கிறது” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K