போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதை அடுத்து, குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி, தெற்கு மற்றும் மத்திய காஸா மீது இஸ்ரேல் படையினர் வான் வழியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று முக்கிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் குழந்தைகள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு இஸ்ரேல் நடத்திய முதல் மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று கூறப்படுகிறது. இதே போல், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தி உள்ளதாகவும், அங்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
பிணைக்கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர் நிறுத்த திட்டங்களையும் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.