பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் இருந்தபடியே அந்நாட்டின் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தான் வரலாற்றில் அதிக ஒடுக்குமுறை செய்யும் சர்வாதிகாரி முனீர் தான் என்றும், அவர் ஒரு மனநலமில்லாதவர் என்றும் இம்ரான் கான் சாடியுள்ளார்.
ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கான், தனது 'X' தளத்தில், 'அதிகார வெறியால் கண்ணிழந்த' முனீரின் ஆட்சியின் கீழ் நடக்கும் ஒடுக்குமுறைகள் முன் எப்போதும் இல்லாதவை என குறிப்பிட்டுள்ளார். மே 9 போன்ற வன்முறை சம்பவங்களை அதிகாரத்தின் துஷ்பிரயோகத்துக்கு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார்.
தன்னையும் தனது மனைவி புஷ்ரா பீபியையும் தனிமை சிறையில் வைத்து முனீர் துன்புறுத்துவதாகவும், "அடிமைத்தனத்தை விட மரணமே மேல்" என்றும் கூறிய இம்ரான் கான், தலைவணங்கவோ சரணடையவோ மாட்டேன் என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும், ஷெபாஸ் ஷெரீப்பின் 'பொம்மை அரசாங்கத்துடனோ' அல்லது ராணுவத்துடனோ பேச்சுவார்த்தை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.