கிரீஸ் நாட்டில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பற்றி எரிந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டில் டெம்பி நகர் அருகே எவங்கெலிஸ்மோஸ் என்ற பகுதியில் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று அப்பகுதியில் சுமார் 350 பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிகள் ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிரே சரக்கு ரயில் ஒன்றும் வேகமாக வந்துள்ளது. ஒரே தண்டவாளத்தில் வருவதை ஓட்டுனர்கள் உணரும் முன்பே அதி வேகமாக வந்த அந்த ரயில்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர். இதனால் ரயில் பெட்டிகள் சரிந்து விழுந்த நிலையில் ரயில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இந்த கோர விபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் சிகிச்சைக்கு கொண்டு சென்ற பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தில் ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.