மேற்கு வங்கத்தில் அடினோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 5 குழந்தைகள் மூச்சு திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகளால் உலகமே முடங்கி கிடந்த நிலையில் சமீப காலமாக அதிலிருந்து மீண்டு உலகம் வழக்கம்போல இயங்கி வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே புதிய வகை வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் அடினோ வைரஸ் என்ற தொற்று பலரை பாதித்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளை இந்த வைரஸ் அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் அடினோ வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் இரு அரசு மருத்துவமனைகளில் 5 குழந்தைகள் நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 9 மாத குழந்தையும் அடக்கம். ஒரே நாளில் 5 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மேற்கு வங்காள சுகாதாரத்துறை “5 குழந்தைகளும் நிமோனியா நுரையீரல் அழற்சியால் இறந்துள்ளன. அதில் 9 மாத குழந்தையும் அடக்கம். குழந்தையின் சோதனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அறிக்கை வந்தால்தான் அக்குழந்தை அடினோ வைரஸால் இறந்ததா என்பது தெரிய வரும்” என கூறப்பட்டுள்ளது.