இன்று அதிகாலை ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் விபத்து வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட்டும், அவருடன் பயணித்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரிஷப் பண்ட் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தான வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரிஷப் பண்ட்டின் கார் போன்றதோரு கார் சாலையில் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அருகே அடிப்பட்ட இளைஞர் ஒருவரை மூவர் காப்பாற்றி வைத்திருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது உண்மையான வீடியோவா என்பது உறுதிப்படாத நிலையில் வேகமாக வைரலாகி வருகிறது.