சமீபத்தில் மலேசியாவில் ஓர் அற்புதமான சுற்றுலா தளம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் அந்த சுற்றுலா தளத்திற்கு வந்த பயணிகளிடம் பேட்டி எடுக்கும் காட்சியும், பின்னணியில் அற்புதமான அருவிகள் மற்றும் இயற்கை வளம் கொழிக்கும் காட்சியும் இருந்தது. இதை அடுத்து, "இது எந்த இடம்?" என்பதை விசாரித்து, ஒரு வயதான தம்பதியினர் அந்த இடத்திற்கு பல மணி நேரம் பயணம் செய்து சென்றனர்.
அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட இடம் குறித்து கேட்டபோது, "அப்படி ஒரு இடமே இங்கு இல்லை" என்று ஹோட்டல் நிர்வாகிகள் கூறினர். அவர்களிடம் அந்த வீடியோவை காட்டியபோது, "இது AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்றும், இது போன்ற எந்த சுற்றுலாத் தளமும் இங்கு இல்லை" என்றும் அவர்கள் கூறினர். இதைக் கேட்டு அந்த தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து, அந்த வீடியோவுக்கு எதிராகத் தாம் வழக்கு பதிவு செய்யப் போவதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது.
AI மூலம் ஒரு போலியான சுற்றுலா தளத்தை உருவாக்கிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இருப்பதாக கூறப்படுகிறது.