நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் விளம்பர பணிகளை இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்காக நேரு ஸ்டேடியம் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆளுங்கட்சி தரப்பு இந்த விவகாரத்தில் பிரச்சனை செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டதால், தற்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாறாக, இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்தின் 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற அதே இடத்தை ஜனநாயகன் படக்குழு தேர்வு செய்திருப்பதாகவும், விரைவில் அதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருவதாகவும், இதற்காகவே பல கோடிகளை செலவழிக்க முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியீட்டுக்கு முன்னதாகவே இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.