பாலிவுட் மூத்த நடிகரும் பாஜக எம் பி ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலைக் காலமானார். அவருக்கு வயது 89. இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக 60 கள் மற்றும் 70 களில் கலக்கியவர் தர்மேந்திரா.
அவரும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்த ஷோலே திரைப்படம் இந்திய வணிக சினிமாவின் கல்ட் கிளாசிக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதைக் குறைத்துக் கொண்ட தர்மேந்திரா குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கடந்த ஒரு வாரமாக மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் வெண்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திராவை பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் சென்று பார்த்து வந்தனர். அவர் விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.