பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து திரைப்படம் கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சொல்லப்பட்டது. இந்த படம் வெறும் ஐந்தரை கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த ஸ்வாசிகா அதன் பின்னர் கவனிக்கப்படும் நடிகையாகி தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து “ஸ்வாசிகா கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளிடம் பேசினோம். ஆனால் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாரா என்று பலரும் நடிக்க மறுத்துவிட்டார்கள். ஆனால் ஸ்வாசிகாதான் அந்த கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் இல்லையென்றால் லப்பர் பந்து படமே இல்லை. “ என பாராட்டியுள்ளார்.