தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின. இதையடுத்து அவரின் அடுத்த படமாக மாமன் மே 16 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படமும் வெற்றி பெற்று சூரிகென்று ஒரு நிலையான மார்க்கெட் உருவாகியுள்ளது.
இதையடுத்து அவர் மண்டாடி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த படம் இதுவரை சூரியின் கேரியரில் இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில் சூரி தன்னுடைய குடும்பத்தினரோடு மதுரையில் தீபாவளிக் கொண்டாடிய வீடியோவை எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில் ஒரு நபர் “திண்ணையில் கெடந்தவனுக்கு திடுக்குன்னு கெடச்சுச்சாம் வாழ்க்க” என்று பதிவிட்டார். அதில் “திண்ணையில் இல்லை நண்பா பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள்தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.” எனப் பதிலளித்துள்ளார். சூரியின் இந்த பதிலுக்கு இணையத்தில் ஆதரவு கூடி வருகிறது.