கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இந்நிலையில் இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய படங்களை முடித்த பின்னர் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு இசையமைக்க ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.