நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ரிலீஸானது.
ஜூன் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாகத் தமிழ் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸாகும். ஆனால் இந்த படத்துக்கான ஒப்பந்தத்தில் படம் ரிலீஸாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸாக வேண்டும் என்ற நிபந்தனையோடு விற்றுள்ளார்களாம். இதன் காரணமாக தியேட்டரில் இந்த படத்துக்கு அதிக வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.