பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப் பற்று ஆகியப் படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் எல்லாப் படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் பெற்றன.
ஆனாலும் அவர் மற்ற நடிகர்கள் போல வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அவரது புகைப்படங்களில் மிகவும் இளைத்து ஆள் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். மேலும் அவரது பதிவுகள் எல்லாம் விரக்தி மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. அவர் நடித்த படங்களின் சம்பள பாக்கி, மற்றும் பட வாய்ப்புகள் இல்லாதது ஆகியவை காரணமாக அவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அவர் வெளியிடும் வீடியோக்கள் எல்லாம் அவர் சுயநினைவோடு இருப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீயை வைத்து இறுகப்பற்று என்ற படத்தை தயாரித்தவருமான எஸ் ஆர் பிரபு “ஸ்ரீயின் உடல்நிலை குறித்து நாங்கள் ரொம்பவே அக்கறைக் கொண்டுள்ளோம். அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால் அதற்குள்ளாகவே நிறைய கருத்துகள் எழத் தொடங்கிவிட்டன. ஆனால் ஸ்ரீயைக் கண்டுபிடித்து மீண்டும் அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதுதான் எங்களின் முதல் இலக்கு. யாராவது அவர் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்தினால் அது மிகவும் உதவியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.