சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே ஆண்டில் 1300 கோடி ரூபாய் மூன்றே படங்களுக்கு முதலீடு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது மூன்று படங்களை தயாரித்து வருகிறது. ஒன்று, ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி . இரண்டாவது, ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம். மூன்றாவதாக, அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்.
இந்த மூன்று படங்களின் மொத்த பட்ஜெட் ரூ.1300 கோடி என கூறப்படுகிறது. கூலி திரைப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டிலும், ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டிலும் உருவாகும் நிலையில், அட்லீ-அல்லு அர்ஜுன் திரைப்படம் ரூ.600 கோடி தயாரிப்பு செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மூன்றே படங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை சன் பிக்சர்ஸ் ஒரே ஆண்டில் முதலீடு செய்துள்ளது என்பது ஆச்சரியத்தை உருவாக்கும் செய்தியாக உள்ளது.
ஏற்கனவே தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களான எந்திரன் உள்பட சில படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதன் பின் பல படங்களை தயாரித்தது. சமீபத்தில் இந்நிறுவனம் தயாரித்த ஜெயிலர் மற்றும் ராயன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து, கோடி கணக்கில் லாபத்தை கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது தயாரித்து கொண்டிருக்கும் மூன்று படங்களும் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.