எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் தற்போது தலைவன் தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க குணச்சித்திர வேடங்களில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். இதுவரை வெளியான முன்னோட்டம் மற்றும் முதல் தனிப்பாடல் ஆகியவை கவனத்தை ஈர்த்துள்ளன. படம் ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையொட்டி நடந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் பாண்டிராஜ் “ஒரு குடும்ப விழாவுக்காக குலதெய்வ கோயிலுக்கு சென்றபோது பார்த்த கதாபாத்திரங்கள்தான் ஆகாசவீரனும், பேரரசியும். அதை அப்படியே எடுக்க முடியாது. ஆனால் அவர்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எழுத ஆரம்பித்தேன். அந்த கதாபாத்திரங்களை விஜய் சேதுபதி அல்லது நித்யா மேனன் ஆகியவர்களைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” எனப் பேசியுள்ளார்.