தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடுமையான விமர்சனங்களுக்கும் ட்ரால்களுக்கும் ஆளாகியுள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் ரசிகர்களை செம்ம ஆட்டம் போடவைத்தது. பூஜா ஹெக்டேவின் க்ளாமர் மற்றும் சௌபின் சாஹிரின் வித்தியாசமான நடனம் ஆகியவைக் கவர்ந்திழுத்த நிலையில் இந்த பாடல் வைரல் ஆனது. இந்நிலையில் யுடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த பாடல் சாதனைப் படைத்துள்ளது.