பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இப்போது படத்தின் ப்ரமோஷன்களில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிரத்னத்திடம் பத்திரிக்கையாளர் ஒருவர் ”ராஜராஜ சோழனை, இந்து மன்னனாக மாற்றி, அவரின் அடையாளத்தை மாற்றக் கூடிய வேலைகள் நடப்பதாக சர்ச்சைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மணிரத்னம் “ இதில் ஏன் மதத்தை நுழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு சரித்திரப் புனைவு. ராஜ ராஜ சோழன், வியத்தகு சாதனைகளை செய்த அரசர். அவரைப் பற்றி கல்கி எழுதியதை வைத்து உருவாக்கப்பட்ட படம் இது. இல்லாத ஒரு விஷயத்தை சர்ச்சையாக பார்ப்பது தேவையில்லாதது.” எனக் கூறியுள்ளார்.