தமிழ் சினிமாவில் ஒரு வணிக சினிமா இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அப்படி நடந்த ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பரும் இயக்குனருமான இயக்குனர் மடோன் அஸ்வின் குறித்துப் பேசியுள்ளார். அதில் “நாங்கள் எல்லாம் குறும்படம் என்றால் என்னவென்று கத்துக் கொண்டிருந்தபோது அவன் குறும்படத்துக்காக தேசிய விருதே வாங்கினான். நான் முதல் படம் 2014 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஆன போது அவன் முதல் கதையை எழுதிக் கொண்டிருந்தான்.
ஆனால் என்னுடைய நான்காவது படம் உருவாகிக் கொண்டிருந்தபோதுதான் அவன் முதல் படமே ரிலீஸானது. மாவீரன் படத்தையே ரொம்ப கமர்ஷியலாக எடுத்துவிட்டோமோ என வருத்தப்பட்டு கொண்டிருப்பான். அதனால் அடுத்த படத்தை அதிக நாட்கள் எடுத்துக் கொண்டு எழுதி வருகிறான்” என தெரிவித்துள்ளார்.