தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். தற்போது தன்னுடைய கனவான கார் ரேஸ் பந்தயங்களில் மீண்டும் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ள அஜித், வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கும் முடிவில் உள்ளாராம்.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என்றும் அதை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.