கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மாஸ்க் படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. ஆன்லைன் டிராக்கிங் தளமான sacnilk வெளியிட்டுள்ள தகவலின் படி முதல் நாளில் 1 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருக்கலாம் என அறிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த படம் வசூலிப்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி நிலவரம் தெரியவரும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக படத்தின் இணைத் தயாரிப்பாளரான ஆண்ட்ரியா “நான் தயாரிப்பாளர் ஆவதற்காக என் வீட்டை வைத்து லோன் வாங்கினேன். அந்த வீட்டை நான் சினிமாவில் சம்பாதித்தப் பணத்தை வைத்துதான் வாங்கினேன். அதனால் சினிமாவில் சம்பாதித்தக் காசை சினிமாவிலேயே முதலீடு செய்கிறேன். மாஸ்க் படம் போட்டக் காசை திரும்ப எடுத்தால் நான் நடித்த பிசாசு 2 படத்தை நானே துணிந்து ரிலீஸ் செய்வேன். என் சினிமாக் கேரியரில் மிக முக்கியமானப் படம் பிசாசு 2” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் கவின்ம் “மாஸ்க் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.