தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தரமணி மற்றும் வடசென்னை போன்ற படங்களில் காத்திரமான நடிப்பைப் வழங்கிப் பாராட்டுகளைக் குவித்துள்ளார். இப்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். கவினும் தானும் நடிக்கும் மாஸ்க் படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று மாஸ்க் திரைப்படம் ரிலீஸாகும் நிலையில் ஆண்ட்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் தயாரிப்பாளர் ஆவதற்காக என் வீட்டை வைத்து லோன் வாங்கினேன். அந்த வீட்டை நான் சினிமாவில் சம்பாதித்தப் பணத்தை வைத்துதான் வாங்கினேன். அதனால் சினிமாவில் சம்பாதித்தக் காசை சினிமாவிலேயே முதலீடு செய்கிறேன். மாஸ்க் படம் போட்டக் காசை திரும்ப எடுத்தால் நான் நடித்த பிசாசு 2 படத்தை நானே துணிந்து ரிலீஸ் செய்வேன். என் சினிமாக் கேரியரில் மிக முக்கியமானப் படம் பிசாசு 2” எனக் கூறியுள்ளார்.