தமிழ் சினிமாவில் குறும்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது முன்னணிக் கமர்ஷியல் இயக்குனராக இருப்பவர் கார்த்திக் சுப்பராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த படம் 104 கோடி ரூபாய் வரை வசூலித்து கௌரவமான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய அடுத்தப் படம் பற்றிப் பேசும்போது “ரெட்ரோவுக்குப் பின்னர் என்னுடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு சிறிய படத்தைப் புதுமுகங்களை வைத்து இயக்கி, அதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து திரையரங்கில் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளேன். வசூல் பற்றிக் கவலைப் படாமல் அந்த படத்தை இயக்கலாம் என முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்தபடத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த படத்தைக் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனத்தோடு இணைந்து ஆஸ்கர் விருது வென்ற குறும்படத்தைத் தயாரித்த குனித் மோங்யாவின் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாருக்கிறது.