தெரு நாய்களின் தொல்லை குறித்து கர்நாடக சட்ட மேலவையில் நடந்த விவாதத்தின்போது, ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. எஸ்.எல். போஜேகவுடா தான் சிக்மகளூரு நகராட்சிக் குழுவின் தலைவராக இருந்தபோது, 2,800 நாய்களைக்கொன்று புதைத்ததாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போஜேகவுடா மேலவை விவாதத்தில் பேசும்போது, "நாய்களைக் கொன்று, அவை மரங்களுக்கு இயற்கை உரமாக பயன்பட வேண்டும் என்பதற்காகப் புதைத்தேன். தெரு நாய்களை பிடிப்பதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் வீட்டிலேயே சில நாய்களை விடுவிக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு அதன் உண்மை நிலை புரியும் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். "தெரு நாய் தங்கள் குழந்தைகளைக் கடித்தால் என்ன செய்வார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
போஜேகவுடாவின் இந்த கருத்து, டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள தெரு நாய்களை பிடித்து, கருத்தடை செய்து, நிரந்தரமாக அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடும் உத்தரவுகளை பிறப்பித்திருக்கும் வேளையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.