18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசதம்பாவித சம்பவத்துக்குக் காரணம் மைதானம் அமைந்துள்ள நெரிசலான இடமே என சொல்லப்பட்டது.
இதனால் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் வேறொரு புதிய மைதானத்தை உருவாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் விரைவில் நடக்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம் மைதானத்துக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை போட்டிகளை நடத்த போலீசாரிடம் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான அனுமதியை இன்னும் சின்னசாமி மைதானத்தின் சார்பாகப் பெறவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் அடுத்த சீசன் ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடக்குமா அல்லது RCB அணியின் ஹோம்கிரவுண்ட் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக RCB அணி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.