ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பிறகு 17 ஆண்டுகளாக அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சஞ்சு சாம்சன் வழிநடத்தினாலும் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவரை சி எஸ் கே அணி ட்ரேடிங் மூலமாக வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய ராஜஸ்தான் அணி ஒரு டிமாண்ட்டை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி சஞ்சு சாம்சனுக்குப் பதில் ருத்துராஜ், ஜடேஜா அல்லது ஷிவம் துபே ஆகிய மூவரில் ஒருவரை கொடுக்கவேண்டும் எனக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அணியின் அடையாளமாக இருக்கும் இந்த வீரர்களைக் கொடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முன்வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.