முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம்தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வியாபாரப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில் படத்தின் வெளிநாட்டு விநியோக வியாபாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை சுமார் 75 கோடி ரூபாய்க்கு Phars பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் அதை நாடு வாரியாகப் பிரித்து சுமார் 100 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது எந்தவொரு தமிழ்ப் படத்துக்கும் நடக்காத மிகப்பெரிய வியாபாரம் என்று சொல்லப்படுகிறது.