ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களை பற்றித்தான் நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். இவர்களே ஒரு நேரத்தில் கதையை தேர்வு செய்வதில் சொதப்புவது உண்டு. இவர்களை போல் பல முன்னணி நடிகர்கள் கமெர்ஷியல் என்ற பேரில் வசூலுக்காக மட்டும் ஆக்ஷன், மாஸ் இவைகளை நம்பி கதையை பற்றி சில நேரங்களில் அவர்கள் கவலைப்பட்டதே இல்லை.
ஆனால் ஆரம்பத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கும் கதையில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருபவர் நடிகர் அருள்நிதி. ஒரு பெரிய கமெர்ஷியல் ஹீரோ இல்லை என்றாலும் இவர் நடித்த படத்தை நம்பிக்கையுடன் போய் பார்க்கலாம்பா என்ற அளவுக்கு ரசிகர்களுக்கு திருப்தியான படத்தைத்தான் இதுவரை கொடுத்திருக்கிறார் அருள்நிதி. கதைத் தேர்வில் திரில்லர், மர்மம், மற்றும் கிரைம் போன்றவைகளுக்கு அதிகம் முக்கியத்துவமும் கொடுத்து வருகிறார்.
சொல்லப்போனால் இதுதான் அவருடைய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இவரை பொறுத்தவரைக்கும் இயக்குனர் மீது எப்போதுமே நம்பிக்கையுடன் தான் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. தவறான கதையை தேர்ந்தெடுப்பது தனது கெரியருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எப்போதுமே மனதில் வைத்து செயல்பட்டு வருகிறார். அதனால்தான் என்னவோ வருடத்திற்கு அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் இவருடைய படங்கள் வெளியாகின்றன.
ஆனால் அப்படி வரும் படங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் இருக்கிறது. இவருடைய படங்களில் ஹீரோயின்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் குறைந்ததாகவே இருக்கும். இந்த நிலையில் அவருடைய நடிப்பில் அடுத்து ஒரு படம் தயாராகி வருகிறது. மை டியர் சிஸ்டர் என்ற பெயரில் உருவாகி வரும் அந்தப் படம் அக்கா தம்பிக்கு இடையில் நடக்கும் சண்டை , மோதல் இவைகளை மையப்படுத்தி தயாராகி வருகிறது.
அக்காவாக நடிகை மம்தாமோகன்தாஸும் தம்பியாக அருள் நிதியும் நடித்துள்ளனர். அந்தப் படத்தின் ப்ரோமோதான் இன்று வெளியாகியிருக்கிறது. புரோமோ மிகவும் வித்தியாசமாகவும் உருவாகியிருக்கிறது.