நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக மாறிவிட்டாலும் இன்னும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் போல அவர் களத்திற்கு வந்து அரசியல் செய்யவில்லை. இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசினார். அதன்பின் சில மாவட்டங்களுக்கு சென்று பிரச்சார வேனின் மேலே நின்று 20 நிமிடங்கள் பேசினார். அதோடு சரி. எனவே தவெக இன்னும் முழு அரசியல் கட்சியாக மாறவில்லை. அவர்கள் மக்களுக்காக எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. கட்சி தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் தவெக நடத்திய போராட்டங்கள் எத்தனை? என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கரூர் சம்பவத்தால் தவெக ஒரு மாத காலம் முடங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறிய பின்னர் தவெகவ்வின் அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடிக்க துவங்க்கியிருக்கிறது. சமீபத்தில் கூட தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் தவெக தலைவராக விஜய் தரப்பிடமிருந்து தினமும் அறிக்கைகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் போராட்டம் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்திவரும் நிலையில் தவெகவும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
எனவே, விரைவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் உண்மையில் விஜய் இதில் கலந்து கொள்ள மாட்டார் என சொல்கிறார்கள். அவரின் அறிவுறுத்தலின்படி தவெகவினர் போராட்டத்தை நடத்துகிறார்களாம். அனேகமாக புஸி ஆனந்த் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும் என கருதப்படுகிறது.