ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கூலி படம் கடந்த ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றாலும், விமர்சன ரீதியாக படுமோசமான கேலிகளை சந்தித்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடல் இணையத்தில் வைரலானது. இதுவரை இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பாடலை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கிண்டல் செய்யும் விதமாக எழுதியுள்ள முகநூல் பதிவு இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் “ஒருவழியாக நேற்று 'மோனிகா' பாட்டைக் கேட்டுவிட்டேன். ஓரிரு மாதங்கள் முன்பு நான் மாலையில் விளையாடப் போகுமிடத்தில் இந்த மோனிகா பாடலைப் பற்றிப் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தனர் நண்பர்.
பிறகு இன்னுமொரு இடத்தில் வேறு சிலர் இதைப்பற்றிப் பேசியதையும் கேட்டேன். நான் ஏதோ சமீபத்திய ஹிட் போல என்று நினைத்து அத்தோடு விட்டுவிட்டேன். நேற்று தற்செயலாக YouTube-ல் ஒன்றைத் தேடும்போது இந்தப் பாடலின் முகப்பு வந்தது. என் மனைவி அதைப்போடுங்களேன் ஒருமுறை கேட்டுப்பார்ப்போம் என்றவுடன் நானும் ரொம்ப நாள் கேட்கவேண்டும் என்று நினைத்ததை சாதித்துவிட்டேன்.
அந்தப் பெண் யாரென்று தெரியவில்லை. அதில் ஆடும் மலையாள நடிகர் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர் என என் மனைவி சொன்னதும் நினைவுக்கு வந்தார் அவர். யார் இந்தப் படத்தின் இயக்குநர்? லோகேஷ் கனகராஜ் பாணியிலே 1,000 பேரை ஆடவைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே பார்த்தேன். இறுதியில் அவர்தான் இயக்குநர் என்று தெரிந்ததும் நானே சிரித்துவிட்டேன்.
70-களில் club dance என்று ஒரு அம்சம் எல்லா வணிகப்படங்களிலும் இருக்கும். அது இடையில் காணாமல் போய்விட்டு மறுபடியும் உள்ளே வந்து லோகேஷ் படங்களில் ஒட்டிக்கொண்டது வியப்புதான்!
இன்னமும் அது என்ன படம் என்று எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை.” எனப் பதிவிட்டுள்ளார்.