தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த முதல் படமான மீசைய முறுக்கு படத்தை இவரே இயக்கி, நடித்தும் இருந்தார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தவர் நீண்ட காலம் படம் நடிக்காமல் இருந்து, பின்னர் சமீபத்தில் பிடி சார் என்ற அவருடைய படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் இயக்கிய படமான கடைசி உலகப்போர் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வி படமாக அமைந்தது. அதனால் இந்த படத்தைத் தயாரித்த வகையில் ஆதிக்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்பட்டது.
இதையடுத்து சமீபகாலமாக அவர் இசை கச்சேரிகளில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் நடத்திய கச்சேரிகளின் மூலம் மொத்தமாக சுமார் 160 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ஓரு தகவல் பரவி வருகிறது. கடந்த இரண்டாண்டுகளில் உலகம் முழுவதும் அவர் பல இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.