தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான அவரை பாரதிராஜா தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்தில் அனைத்து வகையான கதாபாத்திரங்களும் ஏற்று நடித்தக் கார்த்திக் ஒரு கட்டத்தில் காணாமல் போனார். அதற்குக் காரணம அவருக்கு இருந்த சில கெட்டப் பழக்கங்களும், கெட்ட நண்பர்களும்தான் என்று சொல்வார்கள்.
இந்நிலையில் அவரை வைத்துப் படம் இயக்க முயன்று தோல்வியடைந்த கதையை இயக்குனரும் நடிகருமான பாரதிகண்ணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “ஒரு தயாரிப்பாளருக்காக கார்த்திக்கை வைத்து படம் எடுக்க 10 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் கார்த்திக் கதையை மாற்றவேண்டும் என்றார். அதற்குள் தயாரிப்பாளருக்கு கார்த்திக் ஒழுங்காக ஷூட்டிங் வரமாட்டார் என்பது தெரிந்துவிட்டது. அட்வான்ஸைத் திருப்பிக் கேட்க சொன்னார்.
ஆனால் கார்த்திக் “என்னிடம் பணம் சென்றால் அது திரும்ப வராது என்று சினிமாக்காரர்கள் அனைவருக்குமே தெரியுமே என்றார். ஒருவழியாக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலமையில் அவரிடம் பணம் கொடுத்த 7 தயாரிப்பாளர்கள் பஞ்சாயத்துக் கூட்டினோம். ஆனால் வழக்கம்போல லேட்டாக வந்த கார்த்திக் ஒரே ஒரு தயாரிப்பாளருக்கு மட்டுமே பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். மற்றவர்களுக்கு எல்லாம் தேதிதான் கொடுப்பேன் என்றார். அவர் தேதியை வைத்து அவரை ஷூட்டிங் வரவழைத்து எப்படி படமெடுப்பது என அப்படியே விட்டுவிட்டேன். 10 லட்சம் நஷ்டத்தோடு போகட்டும் என்று. கார்த்திக்கின் மார்க்கெட்டை யாரும் கெடுக்கவில்லை. அவரேதான் இப்படி பிரச்சனைகள் பண்ணி கெடுத்துக் கொண்டார்” எனக் கூறியுள்ளார்.
பாரதி கண்ணன் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அது பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் “அந்த வீடியோ வெளியானதும் கார்த்திக்கின் தென் மாவட்ட ரசிகர்கள் போன் செய்து “என்ன அண்ணே இப்படி பேசிட்டீங்க.” என மென்மையாக மிரட்டினார்கள். அதே போல பிரபு, ராதாரவி போன்றவ நடிகர்களும் ஃபோன் செய்து அப்படி பேசியிருக்க வேண்டாம் என சொன்னார்கள். நான் நகைச்சுவையாக சொன்னது வேறு விதமாக பரவி விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.