தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமா சந்தையில் இருந்து வெளியேறினார். இப்போது பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் கச்சேரிகள் மூலமாகக் கம்பேக் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தற்போது பழையப் பாடல்களைப் பயன்படுத்துவதில் காப்புரிமை சம்மந்தமான சர்ச்சை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இளையராஜா தன்னுடையப் பாடல்களுக்கானக் காப்புரிமையைப் பெற நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் தேவா தான் பாடல்களுக்குக் காப்புரிமைக் கேட்பதில்லை என்று சொல்லி அதற்கானக் காரணமாக ஒரு கதையையும் சொல்லியுள்ளார்.
அதில் “நான் காப்புரிமை கேட்பதில்லை. ஏன் என்று ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் சில பொருட்கள் வாங்க வணிக வளாகம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது ஒரு தந்தை அவர் மகனிடம் என்னைக் காட்டி “உனக்கு ரொம்ப பிடிக்குமே கரு கரு கருப்பாயி பாடலுக்கு இசையமைத்தது இவர்தான்” என்று சொன்னார். அதைக் கேட்டு அந்த சிறுவன் கைகொடுத்தான். இது போன்ற அடுத்த தலைமுறை சிறுவர்களுக்கும் என் பாடல் செல்கிறது என்பதற்காகதான் நான் காப்புரிமைக் கேட்பதில்லை” எனக் கூறியுள்ளார்.
தேவா இப்படி சொன்னாலும் அவரது பாடலுக்கான காப்புரிமையை வைத்திருக்கும் நிறுவனம் அவரது பாடல்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தும்போது அதற்கான தொகையைப் பெற்று அதில் ஒரு சதவீதத்தை தேவாவுக்கு மாதாமாதம் கொடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.