அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை இடம் பிடித்தவர் தான் இளையராஜா. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்களுக்கு அவர் இசையமைத்த சம்பவமெல்லாம் அப்போது நடந்தது. ஒரு வருடத்திற்கு 52 படங்களுக்கு இளையராஜா இசையமைத்ததெல்லாம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.
70, 80களில் பிறந்தவர்கள் இப்போதும் இளையராஜாவின் பாடல்களைதான் கேட்டு ரசித்து வருகிறார்கள். சமீப காலமாகவே இளையராஜா பணத்தாசை பிடித்தவர் என்பது போல பலரும் சமூக வலைதளங்களில் அவரை திட்டி வருகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. சம்பளமே வாங்காமல் அவர் பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரியாது.
அன்னக்கிளி படத்தில் இளையராஜாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் செல்வராஜ். இவர் அடிப்படையில் ஒரு கதாசிரியர். இவர்தான் இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்திடம் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தி இசையமைப்பாளர் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர். அதன்பின் கவிக்குயில், கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், புதுமைப்பெண், இதய கோவில், உதயகீதம், முதல் மரியாதை, கீதாஞ்சலி, பாடு நிலாவே, கொடி பறக்குது உள்ளிட்ட பல படங்களுக்கும் இவர்தான் கதாசிரியர். அதாவது பாரதிராஜா இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு செல்வராஜ்தான் கதாசிரியர்.
அதுபோக 5 திரைப்படங்களை செல்வராஜ் இயக்கியும் இருக்கிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய செல்வராஜ் என்னுடைய 20 படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆனால் ஒரு படத்துக்கும் அவர் சம்பளமே வாங்கியதில்லை. பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரில் திருநெல்வேலி இட்லி கடை என ஒரு கடை உண்டு. அந்த கடையிலிருந்து இட்லியும் வடையும் ஆர்டர் பண்ணி அவருக்கு கொடுப்பேன். அதுதான் அவர் என்னிடம் வாங்கிய சம்பளம். இதுவரைக்கும் அவரை என்னிடம் சம்பளம் கேட்டதே இல்லை என்று சொல்லியிருக்கிறார் செல்வராஜ்.