ஷாருக் கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தீபிகா படுகோன். அந்த படத்தின் இமாலய வெற்றியை அடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சக நடிகர் ரண்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அட்லி- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகிவரும் பிரம்மாண்டமானப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் நுழைந்த போது ஆரம்பகால கட்டத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து அவர் சமீபத்தில் பேசியுள்ளார். அதில் “சினிமாவுக்கு வந்த புதிதில் என் நிறம் குறித்து எதிர்மறையாகப் பேசினார்கள். நிறைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு என் புகைப்படத்தை அனுப்பியபோது பார்க்க ஆண்போல இருக்கிறேன் எனக் கண்முன்னாகவே சொன்னார்கள். அது மிகவும் வருத்தமாக இருந்தது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.