அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விருந்தாக அமைந்துள்ளது.
என்னதான் தமிழ் சினிமாவில் ஏராளமான அஜித் ரசிகர்கள் இருந்தாலும், அஜித் படங்கள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறையே வெளியாகி வருவதால் படம் வெளியாகும் நாளெல்லாம் அவர்களுக்கு திருவிழா நாளாகவே இருந்து வருகிறது. அப்படியாக தற்போது வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கமர்ஷியல் படம் பார்க்கும் சாதாரண ஆடியன்ஸுக்கும் ஒரு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
வழக்கமான கமர்ஷியல் ஹீரோ படங்களில் வரும் மாஸ் ஓபனிங் சீன்கள், பஞ்ச வசனங்கள், பில்டப் பாடல்கள் எதுவுமே இல்லாமல் சர்வ சாதாரணமாக அஜித்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இண்ட்ரோ தமிழ் மாஸ் மசாலா சினிமாக்களில் ஒரு புதிய முயற்சி. எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாத அந்த ஓபனிங் காட்சிக்கே விசில் சத்தம் பறக்கிறது.
படம் எதிர்பார்த்தபடியே ப்ரேக்டவுன் படம் போல ஒரு ஹைவேயில் நடக்கும் க்ரைம் கதைதான் என்றாலும், அதில் ஹீரோ, வில்லன்களுக்கான பின்கதை இருக்காது. ஆனால் இதில் அவர்களுக்கான பின்கதைகளும் சேர்க்கப்பட்டு தமிழுக்கான கமர்ஷியல் கதை அம்சங்கள் சரியாக கையாளப்பட்டிருக்கிறது. படத்தில் அஜித்குமார் 3 காலக்கட்டங்களை சேர்ந்தவராக வருகிறார்.
ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ற அவரது தோற்றமும், அதற்கேற்ற உடல் மொழியும், நடிப்பும் சிறப்பு. ஆரம்பத்தில் மிகவும் சாந்தமான, கெஞ்சும் அஜித்குமாராக வந்து அடுத்தடுத்து அதிரடி அஜித்தாக மாறும் சீன்கள் விசில் சத்தம் பறக்கிறது. அஜித் - த்ரிஷா இடையேயான காதல் காட்சிகள், கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதேபோல அஜித் - அர்ஜுன் மோதல் காட்சியும் பக்கா அதிரடி ஆக்ஷனாக அமைந்துள்ளது. அர்ஜூனின் அலட்டிக் கொள்ளாத உடல்மொழியும், நடிப்பும் வில்லனாக அவரை இன்னும் ஒரு கட்டம் மேலா தூக்கி செல்கிறது.
படத்தின் பின்கதைகள், காதல் காட்சிகள் தவிர்த்து அஜர்பைஜான் காட்சிகள் முழுவதும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை வழங்குகின்றது. சில சேஸிங் காட்சிகளில் காருடன் கேமராவும் அசுர வேகத்தில் பாய்ந்து செல்வது ஒரு சாகசத்தில் இருக்கும் எண்ணத்தை தருகிறது. அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை சிறப்பு. ஆனால் சில இடங்களில் பின்னணி இசை இரைச்சலாவதை தவிர்த்திருக்கலாம். படத்தின் சின்ன குறையாக பார்க்கப்படுவது இரண்டாம் பாதியில் சில நிமிடங்களுக்கு ஏற்படும் சிறு தொய்வு மட்டுமே. படத்தின் ஆரம்பத்திலேயே லீனியராக கதை இப்படிதான் போகிறது என்று தெரிந்து விடுவதால், அடுத்தடுத்து நடக்க போகும் சம்பவங்களை யூகித்துவிட முடிவதால் சில இடங்களில் அலுப்பு தட்டலாம்.
ஆனால் இத்தனை காலமாக காத்திருந்ததற்கு அஜித் கெரியரில் ஒரு சிறப்பான படமாக விடாமுயற்சி அமைந்திருக்கிறது. ஒரு புதிய அஜித்தை பார்த்த திருப்தி கண்டிப்பாக படத்தில் கிடைக்கும்.
Edit by Prasanth.K