பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான் சமீபத்தில் ஒரு ஊடக சந்திப்பில் சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். தாம் தற்போது நடித்துள்ள புதிய படத்தில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்ததாகவும், அதற்குப் பதிலாக தாமே நடிக்க முடிவு செய்ததையடுத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள "சித்தாரே ஜமீன் பர்" திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கியிருப்பவர் பிரசன்னா என்பவர். இவர் தமிழில் "கல்யாண சமையல் சாதம்" படத்தை இயக்கியவர் என்பது பலர் அறிந்ததே.
இந்த புதிய படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அமீர்கான் கூறியதாவது:
"'லால் சிங் சத்தா' தோல்வியடைந்த பிறகு, மனஅழுத்தத்தில் இருந்து திரைத்துறையிலிருந்து விலக நினைத்தேன். அப்போது 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். ஆனால் விலக முடிவு செய்தேன். இயக்குநர் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் நீங்கள்தான் எனது முதல் விருப்பம் என்றார். பின்னர் பர்கான் அக்தர் ஹிந்தி பதிப்புக்கும், சிவகார்த்திகேயன் தமிழ் பதிப்புக்கும் தேர்வானார்கள்."
"ஆனால், நான் திடீரென மனம் மாறி மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்தேன். அதை இயக்குநரிடம் சொன்னபோது, அவர் என்னை ஆதரித்தார். பிறகு பர்கான் மற்றும் சிவகார்த்திகேயனை தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டேன். இருவரும் மிகுந்த நற்பண்புடன் 'இந்த படம் உங்களுக்கே' என்று ஒப்புதல் தெரிவித்தனர்," என்று கூறினார்.