இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஒத்திவைப்புக்கு காரணமாக கூறப்பட்ட ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி, மாரடைப்பு அல்ல என்றும், பரிசோதனையில் அடைப்புகள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர் மன அழுத்தம் காரணமாகவே பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், ஸ்மிருதி மந்தனாவுக்கும் பாலிவுட் இசையமைப்பாளரான பலாஷ் முச்சல் என்பவருக்கும் நடக்கவிருந்த திருமண ஒத்திவைப்புக்கு இது மட்டுமே காரணம் அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாஷ், திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன் ஒரு பெண் நடன இயக்குநருடன் இன்ஸ்டாகிராமில் ரகசியமாக பேசிய ஸ்கிரீன் ஷாட்கள் வெளியானதுதான் உண்மையான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஸ்மிருதியும் அவரது சக வீராங்கனைகளும் திருமணத்திற்காக பகிரப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளனர். தந்தையின் உடல்நிலை சீரான பிறகும், திருமணம் குறித்த எந்தவொரு மறு அறிவிப்பும் ஸ்மிருதி தரப்பிலிருந்து வரவில்லை என்பதால், திருமணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.