இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கௌகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா, 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்று கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியை இழந்தால் இந்திய அணி சொந்தமண்ணில் வொயிட்வாஷ் ஆன மோசமான சாதனையைப் படைக்கும்.
இந்திய அணியின் மோசமான நிலைக்குக் காரணம் பயிற்சியாளர் கம்பீர்தான் என்று சொல்லப்படுகிறது. அவர் பரிசோதனை என்ற பெயரில் அணியில் வீரர்களின் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அவரின் அணித் தேர்வு பொருத்தமற்றதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கௌகாத்தி டெஸ்ட்டில் ஏன் நிதீஷ்குமார் இடம்பெற்றுள்ளார் என்பதே தெரியவில்லை என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சேரி ஸ்ரீகாந்த் கண்டித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவர் தெரிவித்துள்ள கருத்தில் “நிதீஷை ஆல் ரவுண்டர்னு சொல்றாங்க. யாராவது அவர் பந்து வீசுவதைப் பார்த்ததுண்டா? அவர் மெல்போர்னில் சதமடித்தார். அதன் பிறகு அவர் என்ன செய்தார்? அவர் ஒன்றும் ஆபத்தான பேட்ஸ்மேனும் இல்லை. எனவே ஒரு மண்வெட்டியை மண்வெட்டி என்றே அழையுங்கள்” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.