இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, கடந்த மாதம் உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ரத்து செய்தது உட்பட பல தனிப்பட்ட சவால்களை சந்தித்தார். அனைத்தையும் கடந்து, அவர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய மந்தனா, "கிரிக்கெட்டை விட என் வாழ்க்கையில் வேறு எதையும் நான் நேசிப்பதாக நினைக்கவில்லை. இந்திய ஜெர்சியை அணிந்தவுடன், நாட்டிற்காக விளையாடி, போட்டியை வெல்வது மட்டும்தான் என் ஒரே இலக்காக இருக்கும்," என்று தனது மன உறுதியை பற்றி பேசினார்.
"இந்திய ஜெர்சியை அணிவதுதான் மிகப்பெரிய உத்வேகம். இரண்டு பில்லியன் மக்களுக்காக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்ற அந்த எண்ணமே, அனைத்து பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு களத்தில் கவனம் செலுத்த போதுமானது" என்று அவர் கூறினார்.
மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான விவாதங்களாகவே பார்ப்பதாகவும், அவை வெற்றிக்கான ஆர்வத்தின் அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார். மந்தனாவின் இந்த அர்ப்பணிப்பு, நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒரு தொழில்முறை வீராங்கனையாக அவர் செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.